லோகா பட நடிகர் ஒருவர் சூர்யா 47 படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது ‘கருப்பு’ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து, ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்காலிகமாக சூர்யா 47 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யா, தான் புதியதாக தொடங்க உள்ள ‘ழகரம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும் சுசின் ஷியாம் இதற்கு இசையமைக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படத்தில் பகத் பாஸில், நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. அதே சமயம் காக்க காக்க, சிங்கம் ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவை போலீஸ் அதிகாரியாக மீண்டும் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், பிரேமலு, லோகா சாப்டர் 1 ஆகிய படங்களில் நடித்திருந்த நஸ்லேன், ‘சூர்யா 47’ படத்தில் நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


