ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அடுத்தது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ் ஆகும்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இதன் முதல் பாடல் கடந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பாடலின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
எனவே நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகின்றனராம். அந்த வகையில் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி அல்லது 4ஆம் தேதி இந்த பாடல் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த பாடலானது விஜய் பாடியுள்ள பாடலாக இருக்கும் என்றும் இந்த பாடலில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலைக் கொண்டாட ரசிகர்களும் தயாராகி வருகிறார்கள்.

விஜயின் 69ஆவது படமான இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து விரைவில் பின் தயாரிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


