சியான் 63 படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விக்ரம். இவர் தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்காகவும் தன்னை மெழுகாய் உருக்கி நடிக்கக் கூடியவர். அந்த வகையில் வெவ்வேறு பரிமாணத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விடுவார். கடைசியாக இவரது நடிப்பில் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியானது. இதன் பின்னர் விக்ரம் தனது 63வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக சியான் 63 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இதற்கிடையில் இந்த படத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த கதையில் தயாரிப்பாளருக்கும், விக்ரமுக்கும் திருப்தி இல்லை என்பதால் இந்த படத்தை மடோன் அஸ்வினுக்கு பதிலாக அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தெரிவித்திருந்த நிலையில், தற்போது படக்குழுவும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் இன்று (அக்டோபர் 30) மாலை 5.30 மணி அளவில் சியான் 63 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று சாந்தி டாக்கீஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இதனை கொண்டாட இப்பொழுதே தயாராகி வருகிறார்கள்.


