கௌரி கிஷனுக்கு பிரபல இயக்குனர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் கௌரி கிஷன், 96, ஹாட்ஸ்பாட், அடியே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். இவர் தற்போது ‘அதர்ஸ்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கௌரி கிஷனின் உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் அநாகரிகமாக கேள்வி எழுப்பினார். அப்போது ஆவேசமடைந்த கௌரி கிஷன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. அதே சமயம் கௌரி கிஷனுக்கு சின்மயி, குஷ்பு போன்ற திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்தும், கௌரி கிஷனுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “கௌரி கிஷனின் தைரியத்தை பாராட்டுகிறேன். அந்த யூடியூபரின் செயலும், கேள்வியும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, வெட்கக்கேடானது. நடிகைகள் இன்னும் அநாகரிகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதை காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்தது 96 பட இயக்குனர் பிரேம்குமார், “கௌரி கிஷன் மீது ஏவப்பட்ட வன்மத்திற்கு அவர் கொடுத்த சாட்டையடி பதில் சரியானது. ஒரு பெண்ணாக தனது தரப்பின் நியாயத்தை நிலை நாட்டியது பாராட்டுக்குரியது. ஆனால் அதே சமயம் ஒருவரின் வக்கிரமான பேச்சை அங்கிருந்த யாரும் தடுக்கவில்லை. கௌரி கிஷன் பேசும்போது இயக்குனர், கதாநாயகனின் மௌனம் அதைவிட வன்முறையானது” என்று கௌரி கிஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.


