தமிழ் திரைப்படத் துறையினர் சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த ஆண்டை கொண்டாடும் விதமாக “கலைஞர் 100” நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நிறைவேறியது. ரஜினி, கமல், தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், நயன்தாரா, அருண் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். தமிழ் திரையுலக வளர்ச்சிக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் பல்வேறு மேடை நாடகங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந்த விழாவில் தமிழ் திரையுலகினருக்காக 500 கோடி செலவில் பிரம்மாண்ட திரைப்பட நகரம் (ஃபிலிம் சிட்டி) ஒன்று சென்னை பூந்தமல்லி அருகில் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இச்செய்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக உள்ள இந்த திரைப்பட நகரம் பிரம்மாண்டமான LED சுவர்களையும், VFX காட்சிகளை படமாக்க வசதியாகவும், மேலும் உள்ளேயே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றையும் உள்ளடக்கியதாக உருவாக உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் தானும் ஒரு கலைக் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதில் பெருமை கொள்வதாகக் கூறினார். மேலும் அவர் மட்டுமின்றி அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அடுத்த தலைமுறையினரும் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பங்காற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.
- Advertisement -