பராசக்தி படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் ‘பராசக்தி’. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்ற சுதா கொங்கரா இந்த படத்தை இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் ரவி கே. சந்திரன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர். இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் ரவி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மேலும் ‘மதராஸி’ படத்திற்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ‘பராசக்தி’ படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதாவது நடிகர் ரவி மோகன் இன்று (செப்டம்பர் 10) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இதில் ரவி மிரட்டலான தோற்றத்தில் காணப்படுகிறார். மேலும் இந்த படத்தில் ரவியின் கதாபாத்திரம் அவருடைய கேரியரில் முக்கியமான கதாபாத்திரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.