நடிகர் சத்யராஜ் முன்னொரு காலத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அதைத்தொடர்ந்து தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடைசியாக ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மகனாக நடித்து பெயர் பெற்ற வசந்த் ரவி நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சத்யராஜ். இந்த படத்தில் சத்யராஜ் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படமானது சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த படமானது இந்த மே மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அப்போது ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சத்யராஜ், “திரையில் வீரத்தை காட்டுபவர்கள் சூப்பர் மேன் கிடையாது. தரையில் வீரத்தை காட்டுபவர்கள் தான் சூப்பர் மேன். என்னைப் பொறுத்தவரை தரையில் வீரத்தை தேசிய தலைவர் பிரபாகரன் தான்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சத்யராஜ், “பிரபாகரன் தலைமையில் நடந்த தமிழ் ஈழ விடுதலைப் போரானது சர்வதேச வல்லரசு நாடுகளின் தவறான புரிதலாலும் சூழ்ச்சிகளாலும் ஒடுக்கப்பட்டது என்று கூறுவதை விட பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும். என்றாவது ஒருநாள் தமிழ் ஈழம் நிச்சயம் மலரும். அதுதான் காலத்தின் கட்டாயமும் கூட. ஏன் இதை இன்றைக்கு பேசினேன் என்றால் இன்று தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த நாள் – மே 17. அந்தப் போராளிகள் அனைவருக்கும் தமிழ் உறவுகளுக்கும் எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசத் தொடங்கினார். இவருடைய இந்த பேச்சு சமூக வலைதளங்களை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அதேசமயம், “விஜயகாந்த்திற்கு எத்தனையோ பாட்டுகள் இருந்தாலும் அழகான ‘வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே’ என்ற பாட்டை கொடுத்தவர் என் அருமை நண்பர் ஆர்.வி உதயகுமார் தான்” என்றார்.
மேலும் ” சில படங்கள் நடிகர்களால் ஜெயிக்கும சில படம் கதையால் ஜெயிக்கும். வெப்பன் திரைப்படம் கிராபிக்ஸால் ஜெயிக்கும். பாகுபலி கட்டப்பா கதாபாத்திரம் காலத்தால் அழியாத கதப்பாத்திரமாக மாறியது போல இந்த கதாபாத்திரமும் இருக்கும்” என்று பேசினார் சத்யராஜ்.