நடிகர் கமல்ஹாசன், சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சூரி. இவர் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் இதற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த வகையில் கடந்த மே மாதம் சூரி ஹீரோவாக நடித்திருந்த கருடன் திரைப்படம் வெளியான நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அதைத்தொடர்ந்து நடிகர் சூரி, விலங்கு வெப் தொடரின் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் கொட்டுக்காளி எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கூழாங்கல் பட இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்க சக்திவேல் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். கணேஷ் சிவா இதற்கு எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிடையாது. லைவ் சவுண்டை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேசமயம் சமீபத்தில் இதன் ட்ரெய்லரும் வெளியாகி படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. எனவே படமானது வருகின்ற ஆகஸ்ட் 23 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த கமல்ஹாசன் கொட்டுக்காளி படத்தையும் படக் குழுவினரையும் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.