நடிகர் லியோ பிரபு மரணம்.
தமிழ் திரையுலகில் 1950 ம் ஆண்டு முதல் ,மேடை நாடக எழுத்தாளராகவும் ஆசிரியராகவும், நாவல் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர் லியோ பிரபு. “ஸ்டேஜ் இமேஜ்” என்ற தன்னுடைய நாடகக் குழுவின் மூலம் பல மேடை நாடகங்களை நடத்தி தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றார். நாடகத் துறையில் சிறப்பாக பங்காற்றியதன் காரணமாக இவருக்கு தமிழக அரசு 1990 இல் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் பல தொலைக்காட்சி தொடர்களுக்கும் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். ரஜினி நடிப்பில் 1984-ல் வெளியான நான் மகான் அல்ல, கமல் நடிப்பில் 1987-ல் உருவான பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1933 இல் பிறந்தஇவருக்கு 90 வயது நிரம்பியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இவருக்கு உடல் நலக்குறைவு இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது. மதுரையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் தன்னுடைய மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் வசித்து வந்த நிலையில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. திரைத் துறையைச் சார்ந்த பலரையும் இந்த செய்தி துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.