
தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) உடல்நலக்குறைவால் இன்று (மே 03) சென்னையில் உள்ள வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
திரைத்துறையில் மனோபாலா கடந்து வந்த பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 1953- ஆம் ஆண்டு டிசம்பர் 8- ஆம் தேதி அன்று கோயம்புத்தூர் மாவட்டம், சூலூரில் பிறந்தவர் மனோபாலா. திரைத்துறையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மனோபாலா, நடிகர் கமல்ஹாசனின் பரிந்துரையால் 1979- ஆம் ஆண்டு புதியவார்ப்புகள் படத்தில் பிரபல இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார்.
முதன் முதலாக கடந்த 1982- ஆம் ஆண்டு ‘ஆகாய கங்கை’ என்ற திரைப்படத்தை இயக்கிய மனோபாலா, கடைசியாக 2002- ஆம் ஆண்டு ‘நைனா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பிள்ளை நிலா, விஜயகாந்தின் சிறைப்பறவை, ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் உள்ளிட்டத் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
நடிகர் விக்ரமின் பிதாமகன், சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை, கார்த்தியின் அலெக்ஸ்பாண்டியன் படத்தில் காமெடியில் கலக்கியவர். தமிழ் சினிமாவில் பிரபலமான சதுரங்க வேட்டை திரைப்படம் மனோபாலாவின் தயாரிப்பில் உருவானது.
100- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள மனோபாலா, சில தொலைக்காட்சி தொடர்களை இயக்கியதுடன், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். பஞ்சவர்ணம், புன்னகை மன்னன், 777 ஆகிய மூன்று தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் பன்முகத்திறன் கொண்டவர் மனோபாலா என்பது குறிப்பிடத்தக்கது.