கடந்த நவம்பர் 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். ஹை பட்ஜெட்டில் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. திரைக்கதை வலுவாக அமையவில்லை எனவும் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாகவும் பலரும் படத்தை விமர்சித்து வந்தனர். இருப்பினும் இந்த படம் மூன்று நாட்களில் 127.64 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சூரி, திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவர் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தக்ஷிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய கடவுள்களை வணங்கினார். அடுத்தது கோவிலில் பணியாற்றிய பாதுகாவலர்கள், பக்தர்கள் போன்றோர் சூரியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சூரி, விடுதலை 2 படம் குறித்து பேசினார். அதைத்தொடர்ந்து சூர்யாவின் கங்குவா படம் குறித்தும் பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “வருகின்ற டிசம்பர் 20 நான் நடித்திருக்கும் விடுதலை 2 படம் திரைக்கு வருகிறது. நேற்று இதன் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகத்தின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் இளையராஜா. அவர் எழுதியிருக்கும் பாடல்கள் தற்போதும் உள்ள தலைமுறைனர் கேட்கும் வண்ணம் இருக்கிறது. நானும் அவரது காலத்தில் நடிகராக இருப்பதை பாக்கியமாக நினைக்கிறேன். இளையராஜா அவர்கள் ஒரு புத்தகம். மேலும் எனக்கு காமெடியனாகவும் ஹீரோவாகவும் வாய்ப்பு கொடுத்தது மக்கள்தான். தற்போது விலங்கு வெப் சீரிஸ் எடுத்த இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன். அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து வெற்றிமாறனின் புதிய படத்திற்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். நடிகர் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் அருமையாக இருக்கிறது. நன்றாக இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. இந்த படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான படமாக தான் நான் பார்க்கிறேன். தனுஷ் – நயன்தாரா பிரச்சனை குறித்து எனக்கு தெரியாது. தெரிந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை. நான் முருகப்பெருமானை தரிசனம் செய்ய வந்துள்ளேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் சூரி.
- Advertisement -