தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவர் நடிகர் சூரி. இவர் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சூரி கடைசியாக கருடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சூரி ஆக்சன் ஹீரோவாக களமிறங்க படமானது ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை கூழாங்கல் பட இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படம் வெளியீட்டிற்கு முன்னரே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் கொட்டுக்காளி படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக #கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய #பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன்… pic.twitter.com/UhjbAFmxxs
— Actor Soori (@sooriofficial) August 4, 2024
அந்த பதிவில், “எனது முந்தைய படங்களான விடுதலை, கருடன் படத்திலிருந்து இந்த படம் முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இது Mainstream Content Oriented படம். உண்மைக்கு நெருக்கமான படம். இந்த படத்தில் நான் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த பாண்டி கதாபாத்திரமானது இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவுமுறைகளையும் நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகின்ற கதாபாத்திரம்தான். இந்தப் படத்தில் சமூகம் உருவாக்கி இருக்கும் பாண்டிக்கும், பாண்டி என்ற தனிப்பட்ட மனிதனுக்கும் இடையில் நடக்கிற மன போராட்டத்தை சரியா பிரதிபலிக்கனும்னு மிகவும் கவனமாக நடித்தேன். அதை சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். எனவே இந்த கொட்டுக்காளி திரைப்படம் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.