நடிகை அதிதி ராவ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்து, தமிழில் செக்கச் சிவந்த வானம், சைக்கோ படங்களில் அவர் நாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார்.
இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இதனை கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காவனம் திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்குகிறார். இவர் மகா சமுத்திரம் என்ற திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்திற்கு பிறகு சித்தார்த்தும், அதிதியும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ மற்றும் வெளியே செல்லும் புகைப்படங்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளிவந்தன. இதனால், இருவரும் திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்நிலையில், நடிகை அதிதி ராவ் இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.