நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவர் மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் தமிழில் மாமன், தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது இவர், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் கட்டா குஸ்தி 2 படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நீண்ட நாட்களாக சினிமா துறையில் பயணிக்க, காலத்திற்கு ஏற்ப சமூக ஊடகங்களில் செயல்படுவது முக்கியம் என்று நினைத்தேன். ஆனால் நமக்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் சமூக ஊடகம், நம்மையே அதற்காக உழைக்க செய்துவிட்டது. இதனால் என் சிந்தனைகள் குலைந்து என்னுடைய சொற்கள் மங்கிவிட்டன. எளிய மகிழ்ச்சிகளும் சுவை இல்லாமல் போனது. சமூக ஊடகத்தால் ஏற்படும் கட்டுப்பாடுகளையும் அழுத்தங்களையும் எதிர்த்து நிற்பது கடினமாக இருந்தது.
ஒரு பெண்ணாக என்னுடைய இயல்பை காக்க பல முயற்சிகளையும் பயிற்சிகளையும் எடுத்தேன். இதன்மூலம் நான் மறக்கப்படுவேனோ என்ற ஆபத்து இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் இல்லையென்றால் மனதில் கூட இல்லாமல் போகிறேன். எனவே உண்மையான தொடர்புகளையும், சினிமாவையும் தேர்வு செய்ய சமூக ஊடகத்திலிருந்து விலகுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.