நடிகை சௌந்தர்யாவின் விமான விபத்து குறித்து நடிகை மீனா திடுக்கிடும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ,கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் தமிழில் காதலா காதலா, அருணாச்சலம், தவசி, படையப்பா, சொக்கத்தங்கம் என பல வெற்றி படங்களில் நடித்து பெயரையும், புகழையும் பெற்றார். ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினான இவர், சிறந்த நடிகைக்கான பல விருதுகளை அள்ளியுள்ளார். இந்நிலையில் தான் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜகவிற்காக பெங்களூருக்கு தேர்தல் பரப்புரை செய்ய தனி விமானத்தில் தனது அண்ணன் அமர்நாத்துடன் பயணித்தார் சௌந்தர்யா. அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த சௌந்தர்யா, அமர்நாத் உள்ளிட்ட அனைவருமே உயிரிழந்தனர். இந்த தகவல் அந்த நேரத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது சௌந்தர்யாவின் நெருங்கிய தோழி மீனா இந்த விபத்து குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்து உள்ளார். அதாவது அந்தப் பரப்புரைக்கு தானும் அழைக்கப்பட்டதால் சௌந்தர்யாவுடன் தானும் செல்ல இருந்ததாகவும், வேறு சில வேலைகள் இருந்ததனால் தான் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இப்போது நினைத்தாலும் அந்த விபத்து பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


