அதர்வா நடிக்கும் டிஎன்ஏ படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா தமிழ் சினிமாவில் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின்னர் பரதேசி எனும் திரைப்படத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் இரும்பு குதிரை, சண்டிவீரன், இமைக்கா நொடிகள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அதர்வா, நடிகர் மணிகண்டன் உடன் இணைந்து மத்தகம் எனும் வெப் தொடரில் நடித்திருந்தார். அதேசமயம் ஒத்தைக்கு ஒத்த திரைப்படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார். மேலும் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.
இதற்கிடையில் நடிகர் அதர்வா, டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பூஜையுடன் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இன்று நடிகர் அதர்வா தன்னுடைய 35 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 5 மணி அளவில் டிஎன்ஏ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
- Advertisement -