விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலக, இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை கையில் எடுத்தார். அதன்படி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவுக்கு வர உள்ளது. இதற்கிடையில் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்று ரசிகர்கள் பலரும் சற்று அதிருப்தியில் இருந்தனர். எனவே அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக விடாமுயற்சி பட குழுவினர் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். அதாவது அஜித் – த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக ரெஜினாவின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ரெஜினா படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.