நடிகர் அர்ஜுன் தாஸ் தான் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் அடுத்தது இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி ஆகிய படங்களைத் தொடர்ந்து ஒன்ஸ் மோர் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர், அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது அர்ஜுன் தாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதி செய்துள்ளார். அதன்படி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “அஜித் சார் மாஸ்டர் படத்திற்கு பிறகு என்னை அழைத்து, ‘அர்ஜுன் நாம் இருவரும் விரைவில் ஒன்றாக பணியாற்றுவோம்’ என்று சொன்னது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அது கடைசியில் உண்மையில் நடந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு கனவு நனவாகிவிட்டது. அஜித் சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஆதிக் அண்ணா என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி. அஜித் சார் இது உங்களுக்காக, உங்களால் தான். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்” என்று குநெகிழ்ச்சியடைந்துள்ளார் அர்ஜுன் தாஸ்.