நடிகர் அருண் விஜய், தனுஷ் குறித்து பேசி உள்ளார்.
நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் ‘ரெட்ட தல’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இவர், தனுஷ் இயக்கியுள்ள இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். ‘ராயன்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அருண் விஜய், தனுஷ் குறித்து பேசி உள்ளார்.
அதன்படி அவர், ” ஒவ்வொரு நாளும் தனுஷ் சாரின் பணியை பார்த்து உண்மையிலேயே வியப்படைந்தேன். இயக்கம், நடிப்பு, தயாரிப்பு ஆகியவற்றை கையாள்வது அவ்வளவு சின்ன விஷயம் கிடையாது. அவர் மிகவும் தெளிவான, தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவர் அனைத்து மொழிகளிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார். ‘இட்லி கடை’ படம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிடித்த படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

‘இட்லி கடை’ திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


