அஸ்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 12பி, லேசா லேசா, இயற்கை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஷாம். இவர் தற்போது அஸ்திரம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ள இந்த படத்தை பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கல்யாண் வெங்கட்ராமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கே சுந்தரமூர்த்தி இதற்கு இசை அமைத்துள்ளார். கிரைம் இன்வேஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஷாமுடன் இணைந்து நிரா, வெண்பா, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தது நாளை (மார்ச் 7) வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டன. ஆனால் இந்த படம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் இந்த படம் மார்ச் 7ல் வெளியாகாது எனவும் விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அசௌகரியத்திற்கு வருந்துகிறோம் எனவும் படக்குழு தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒவ்வொரு முறையும் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.