தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி, பின் “ராஜா ராணி” படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அட்லீ. அதைத்தொடர்ந்து விஜயின் தெறி, மெர்சல், பிகில் என வேற லெவல் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் அட்லீ அடுத்ததாக விஜயை வைத்து ஒரு படம் இயக்குவார் என தகவல்கள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி பாலிவுட்டின் சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருடனும் படம் இயக்குவது குறித்து விவாதித்து வருகிறார் என்றும் செய்திகள் கசிந்தன. ஆனால் அதையெல்லாம் சுக்குநூறாக்கி தெலுங்கு நடிகருடன் கைகோர்க்க உள்ளாராம் அட்லீ. தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் நடிகராக அறியப்படுபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் இவர் பல ஹிட் படங்கள் நடித்திருந்தாலும் சமீபத்தில் இவருடைய படங்கள் பான் இந்தியா அளவில் பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றன.
இவருடைய “அலா வைகுந்த புரமுலோ”படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வெளிவந்த “புஷ்பா” பான் இந்திய அளவில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அனைத்து மொழிகளிலும் வசூலில் அடித்து நொறுக்கியது. குறிப்பாக வட இந்தியாவில் இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அல்லு அர்ஜுன் பெற்றார். இந்நிலையில்தான் இவர் அட்லீ இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இப்படத்திற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகவும் படப்பிடிப்புகள் 2024 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட உள்ளன என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மிக விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டுகள் வெளியாகவுள்ளன.
- Advertisement -