கேப்டன் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தேமுதிக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேப்டன், புரட்சி கலைஞர் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் விஜயகாந்த். இவர் ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். விஜயராஜ் என்ற இயற்பெயரை கொண்ட இவர், விஜயகாந்த் என்ற பெயரால் சினிமாவில் மிகவும் பிரபலமானவர். நேர்மை, சமூக நீதி, அநீதிக்கு எதிரான போராட்டம் ஆகியவை தொடர்பான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் ஹீரோவாக வலம் வந்தார். அதன்படி விஜயகாந்தின் 100வது படமாக வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்பட்டார். திரைத்துறைக்காக இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அதுபோல அரசியலிலும் களமிறங்கி ஒரு கை பார்த்தார். இவ்வாறு கோடான கோடி ரசிகர்களை சேகரித்து வைத்திருந்த விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய மறைவு தமிழக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இவர் மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றும் ஒரு கருப்பு வைரமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும், சென்னை, கோயம்பேடு 100 அடி சாலைக்கு விஜயகாந்தின் பெயரை சூட்ட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. மேலும் விஜயகாந்த் மறைந்த பிறகு கடந்த ஆண்டு அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது என்பதும், அவ்விருது விஜயகாந்த் சார்பில் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.