யோகி பாபு படத்தில் பூமிகா… ஆசிரியையாக நடிப்பதாக மகிழ்ச்சி…
- Advertisement -

அருண் பிரசாத் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பத்ரி. விஜய் இப்படத்தில் நாயகனாக நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் பூமிகா சாவ்லா. இதையடுத்து விஜய் நடித்த குஷி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடித்தார். இத்திரைப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். இதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடித்த ரோஜா கூட்டம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் தமிழில் பூமிகாவுக்கு என தனியிடத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இதையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து அவர் நடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இத்திரைப்படம் பூமிகாவுக்கு தமிழில் மாபெரும் ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும், ஐஸ்வர்யா என்ற அக்கதாபாத்திரம் பெரிதும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தெலுங்கு, இந்தி என மாறி மாறி பிசியாக நடித்து வந்தார். பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இடைவௌிக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக தமிழில் நடித்து வருகிறார் பூமிகா. கடைசியாக வெளியான கண்ணை நம்பாதே படத்தில் அவர் நடித்திருந்தார்.

தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகும் ஸ்கூல் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். வித்யாதரன் மற்றும் மஞ்சு இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஆர்.கே.வித்யாதரன் இயக்குகிறார். படத்தில் யோகி பாபு, பூமிகாவுடன் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை பூமிகா பள்ளி ஆசிரியையாக நடிக்க உள்ளார். இது மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஸ்கூல் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.