மதராஸி படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நேற்று (செப்டம்பர் 5) ‘மதராஸி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். சிவகார்த்திகேயன் இதில் கதாநாயகனாக நடிக்க ருக்மினி வசந்த் இதன் கதாநாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் வீடியோவில், படத்தின் கதையை சொல்லத் தொடங்கிவிட்டு பின்னர் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார். அதன்படி அவர், “இந்த படத்தை பார்க்கும்போது கஜினி, துப்பாக்கி படங்களை மிக்ஸ் பண்ணி எடுத்தது போன்று இருக்கிறது. இந்த மாதிரி படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். துப்பாக்கி படத்தை போல் இடைவேளை காட்சிக்கு தியேட்டரே அதிர வேண்டும். ஆனால் இந்த படத்தில் இடைவேளையில் படமே முடிந்துவிட்டது போன்று திரைக்கதை இருக்கிறது. என்.ஐ.ஏ அதிகாரி, ஹீரோவையும், ஹீரோயினையும் ஒரு வேலையை செய்ய சொல்வார். அதை சரியாக செய்திருந்தால் படம் அப்பொழுதே முடிந்திருக்கும். இரண்டாம் பாதியில் கதையும் இல்லாமல் திரைக்கதையும் இல்லாமல் சவ்வாக இழுத்து அடித்திருக்கின்றனர். இதனால் படம் சுமாராக மாறிவிட்டது. முதல் பாதியில் சில காட்சிகள் நன்றாக இருந்தது. கதாநாயகன் – கதாநாயகி சந்தித்துக் கொள்ளும் காட்சி எல்லாம் அருமை. ஆனால் ஹீரோவின் பிளாஷ்பேக் கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகவில்லை.
வித்யூத் ஜம்வாலின் சண்டைக்காட்சி சிறப்பாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டுவர போகிறார்கள் என்று பயமுறுத்தி படத்தை தொடங்கிவிட்டு, அந்த துப்பாக்கியை வைத்து சுட்டால் யாருமே சாகாமல் அடுத்த காட்சியிலேயே எழுந்து வருகிறார்கள். இதுபோன்ற துப்பாக்கியை எதற்கு தமிழ்நாட்டில் விற்க வந்தார்கள். இந்த பொம்மை துப்பாக்கியை விற்க அனுமதித்திருக்கலாமே. இந்த மாதிரியான படம் எடுக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.