வாக்குகளை பதிவு செய்த பிரபலங்கள்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு…
- Advertisement -

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 6 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. பொதுமக்கள், அரசியல் வாதிகள், திரை பிரபலங்கள் என அனைவருமே ஆர்வமாக வாக்கு செலுத்தி வருகின்றனர். சென்னை திருவான்மையூரில் முதல் நபராக நடிகர் அஜித் வாக்களித்தார். அதேபோல, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று வாக்குப்பதிவு செய்தார்.

இதேபோல, நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், தனுஷ், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண் ஆகியோரும் வாக்குப்பதிவு செய்தனர். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று அனைத்து பிரபலங்களும் வாக்குப்பதிவு செலுத்தினர். பிரபலங்கள் சென்ற வாக்குச்சாவடிகளில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நடிகர், நடிகைகளை கண்ட ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்துச் சென்றனர்.

இதேபோல, நடிகை த்ரிஷாவும் வாக்குப்பதிவு செய்தார். இறுதியாக சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்ற அவரை, ரசிகர்கள் பலரும் பின்தொடர்ந்து சென்றனர்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்த விஜயை மக்களும், ரசிகர்களும் சூழ்ந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் உதவியுடன் உள்ளே சென்ற நடிகர் விஜய், தனது வாக்கை பதிவு செய்துவிட்டு மீண்டும் காரில் வீடு திரும்பினார்.