தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” என்று கூறியிருந்தார். இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான விவகாரத்தில் நடிகர் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லை என்றால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது எனவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என்று கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கமலுக்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கமும் அறிக்கை வெளியிட்டு கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த திவ்யா ஸ்பந்தனா, இந்த விவகாரம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
I think what @ikamalhaasan meant was Kannada, Tamil, Telugu and Malayalam are all Dravidian languages- we have shared linguistic ancestry and commonality. But to boycott is a bit much no? A faux pas is excusable. pic.twitter.com/3MNYCDo3Sn
— Ramya/Divya Spandana (@divyaspandana) May 29, 2025
அந்த பதிவில், “கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய அனைத்தும் திராவிட மொழிகள் என்பதை குறிப்பிட்டு தான் கமல்ஹாசன் அப்படி பேசி இருப்பார் என்று நினைக்கிறேன். படத்தை புறக்கணிப்பது கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. அவர் பேசியதை மன்னிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவருடைய இந்த பதிவிற்கு, கமல்ஹாசன் சொன்னதைப் போல் அன்பு மன்னிப்பு கேட்காதே என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதற்கு திவ்யா, “அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அன்பில் ஈகோ என்பது இருக்காது. ஒருவர் எளிதாக மன்னிப்பு கேட்க முடியும்” என்று பதிலளித்துள்ளார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.