நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். அடுத்தது தனது ஐம்பதாவது படமான ராயன் திரைப்படத்தையும் இயக்கி நடித்திருந்தார். கேங்ஸ்டர் கதை களத்தில் வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ், பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் ஆகியோரின் கூட்டணியில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து நான்காவதாக புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் தனுஷ். இந்த படத்தை இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் இதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அசோக் செல்வன், நித்யா மேனன் ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளனராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தேனி பகுதியில் தொடங்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு இட்லி கடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் ரசிகர்கள் பலரும் இந்த படமானது ராயன் படத்தின் இரண்டாம் பாகமா? என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
அதாவது ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஃபாஸ்ட் ஃபுட் கடை ஒன்றை நடத்தி வருவார். படத்தின் இறுதியில் தனது தங்கை துஷாராவுடன் வேறொரு ஊருக்கு செல்வது போன்று படம் முடிக்கப்பட்டிருக்கும். இதனால் ரசிகர்கள் பலரும் நடிகர் தனுஷ், ராயன் படத்தின் இறுதியில் வேறொரு ஊருக்கு சென்று அங்கு இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்று ராயன் திரைப்படத்தையும் இட்லி கடை திரைப்படத்தையும் தொடர்புபடுத்தி கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் மற்றொரு தரப்பில், இட்லி கடை திரைப்படம் தனி ஒரு கதையாக தான் இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
- Advertisement -