வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், பகத் பாசில், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை நடித்திருக்கின்றனர். படமானது வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட உள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 20) சென்னை நேரு அரங்கில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட இருக்கிறது. அதே சமயம் தற்போது இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக யார் கலந்து கொள்ளப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நடிகர் மோகன் லால், வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறாராம். மோகன்லால் ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட ஜெயிலர் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அடுத்தது ஜெயிலர் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் மோகன்லால். எனவே இவர்தான் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.