நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் உருவெடுத்து பல படங்களை இயக்கி வருகிறார். மேலும் இவர் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இவர் கடைசியாக தனது 50வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார். இந்த படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. மேலும் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி ஏற்கனவே இந்த படம் இரண்டு நாட்களில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது மூன்று நாட்களில் 70 கோடியை நெருங்கி உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படம் 100 கோடியை நெருங்கிவிடும் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருந்த நிலையில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.