இயக்குனர் ஓம் ராவத், நடிகர் தனுஷ் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டியும் சாதனை படைத்து வருகிறார். அதாவது திரைத்துறையில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக ‘குபேரா’ திரைப்படம் வெளியானது. அடுத்தது ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இவர், ‘தேரே இஷ்க் மெய்ன்’ எனும் படத்தில் நடிக்கிறார். மேலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
அந்த வகையில் விஞ்ஞானி மற்றும் முன்னாள் குடியரசு தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் புதிய படத்தில் அப்துல் கலாமாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார். ஏ.ஏ. ஆர்ட்ஸ், ஏ.கே. என்டர்டெயின்மென்ட் மற்றும் டி சீரிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கலாம் தி மிஸைல் மேன் ஆஃப் இந்தியா என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஓம் ராவத், தனுஷ் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர், “டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வேடத்தில் நடிக்க தனுஷை விட சிறந்த நடிகர் எனக்கு கிடைத்திருக்க முடியாது. அவரைவிட சிறந்தவர் வேறு யாரும் இருக்கவும் முடியாது. அவர் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
