தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதனையும் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது விஜயகாந்தின் மரணம். திரைத் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி தன்னைத் தேடி யார் வந்தாலும் அவருக்கு இல்லை என சொல்லாமல் உதவியவர் விஜயகாந்த். நல்ல உடல் நிலையில் இருந்திருந்தால் இன்றைய தமிழகத்தின் அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கும் ஆளுமை கொண்டிருந்தவர். பல திரைத்துறை பிரபலங்களும், பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் நேரில் வர இயலாமல் வெளிநாடுகளில் இருக்கும் திரைப் பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை வீடியோவாக பதிவிட்டு வருத்தம் தெரிவித்திருந்தனர். சூர்யா, விஷால் ஆகியோர் வீடியோவில் வருத்தம் தெரிவித்திருந்தனர். தனுஷின் சார்பாக அவருடைய தந்தை கஸ்தூரிராஜாவும், சிம்புவின் சார்பாக டி. ராஜேந்தர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் ரஜினி, கமல், விஜய், அர்ஜுன், விஜய் சேதுபதி, மன்சூர் அலிகான் உட்பட பல நடிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.மேலும் அஜித் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறியதாக செய்திகள் வெளியானது.
ஆனால் இவ்வளவு பெரிய துயரத்தின் போதும் கூட நடிகர் அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லையே எனப் பலரும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.குறைந்தபட்சம் அனுதாபம் தெரிவித்து ஒரு வீடியோவையாவது வெளியிட்டு இருக்கலாம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அஜித் பொதுவாகவே பொது நிகழ்ச்சிகளை தவிர்ப்பவர். இருப்பினும் ஒரு நல்ல மனிதனின் இறப்பிற்கு கூட இரங்கல் தெரிவிக்க முடியாத அளவுக்கு மனசாட்சி இல்லாதவரா அஜித் எனவும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறையில் அஜித்துக்கு இருந்த சில பிரச்சனைகளை விஜயகாந்த் களத்தில் நேரடியாக இறங்கி தீர்த்து வைத்ததாகவும் திரைத்துறையில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -