நடிகர் பகத் ஃபாசில் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவர் கடைசியாக ஆவேஷம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதே சமயம் இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே வேலைக்காரன், மாமன்னன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த பகத் பாசில் தற்போது ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினியின் 170வது படமாக உருவாகும் இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகளும் பின்னணி வேலைகளும் உலக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே இந்த படமானது வருகின்ற அக்டோபர் மாதத்தில் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்திலிருந்து நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 8) ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. வேட்டையன் திரைப்படத்தில் ரஜினி, பகத் பாசில் தவிர அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.