பகத் பாசில் – வடிவேலு நடிப்பில் வெளியான மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
பகத் பாசில் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர். இவருக்கு கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தமிழிலும் பட படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்று வருகிறார். அந்த வகையில் உதயநிதி, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் வில்லனாக பட்டைய கிளப்பி இருந்தார். அடுத்ததாக மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் பகத் பாசில். அதாவது தமிழில் பகத் பாசில் கதாநாயகனாக நடித்திருந்த முதல் படம் ‘மாரீசன்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுதீஷ் சங்கர் இதை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஜூலை 25ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஒரு திருடனும், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரும் ஒன்றாக பயணிப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்திருக்கிறது.