மலையாள சினிமா படப்பிடிப்பில் தீ விபத்து
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தற்போது அஜயன்டே ரண்டாம் மோஷனம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜிதின் லால் இயக்கும் இந்த படத்தில் அவர் மூன்று வேடத்தில் நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோர் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காசர்கோடு அருகில் உள்ள சீமேனியில் அரங்கம் அமைத்து நடைபெற்றது. நேற்று முன்தினம் அங்கு எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரங்கப் பொருட்கள் எரிந்து சாம்பலானதாக படக்குழு தெரிவித்து உள்ளது.
தயாரிப்பு நிர்வாகி பிரின்ஸ் ரபேல் கூறும்போது, உடனடி நடவடிக்கையில் இறங்கியதால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது என்றும், இன்னும் 10 நாள் மட்டுமே மீதம் உள்ள நிலையில், தீ விபத்து காரணமாக அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.