மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரமாண்டமாகவும் உருவாகி இருக்கும் கோட் திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க சித்தார்த்தா நுனி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்தது. அதன் பின்னர் ட்ரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அத்துடன் கேப்டன் விஜயகாந்த் படத்தில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், கோட் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் கோட் படத்தில் நடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது. அதன்படி கோட் திரைப்படம் இன்று 5000க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில், படத்தினை மிகுந்த ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் பலரும் திரைக்கதை சுவாரசியமாக செல்கிறது என தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் ரசிகர்கள், சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷாவின் பெயர்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.