விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, அஜ்மல், மைக் மோகன், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், ரஷ்யா, இலங்கை போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதேசமயம் படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் தொடங்கி செப்டம்பர் 5ல் படத்தை திரைக்கு கொண்டு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் அடுத்தடுத்த போஸ்டர்களும் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றன. இந்நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் மூன்றாவது பாடல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன்படி படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “விரைவில் மூன்றாவது பாடல் வெளியாகும்” என்று அறிவித்துள்ளார். எனவே வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி மூன்றாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மூன்றாவது பாடலானது நடிகை ஸ்ருதிஹாசனால் பாடப்பட்டது என்றும் இந்த பாடல் விஜய், திரிஷா நடனமாடிய குத்து பாடலாக கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.