பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பதிலும் ஆர்வம் உடையவர். அந்த வகையில் இவரது 25வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிங்ஸ்டன். கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று (மார்ச் 7) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முதல் கடல் சாகச படமாக உருவாகியிருந்த இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
கதையின் ஆரம்பத்தில் தூவத்தூர் கடல் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலரும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றால் பிணமாகவே திரும்பி வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் கடலில் அடக்கம் செய்யப்பட்ட ஆன்மா தான் காரணம் என மக்கள் அச்சமடைய, இனி யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கிறது. பல ஆண்டுகள் கழித்து கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் (கிங்ஸ்டன்) எப்படியாவது பணம் சம்பாதித்து போட் வாங்கி கடலுக்குள் செல்ல வேண்டும் என விரும்புகிறார். இதனால் அவருடைய முதலாளி தாமஸ் என்பவரிடம் பணிபுரிய ஒரு கட்டத்தில் அந்த முதலாளி போதைப் பொருள் கடத்துபவர் என்பது கதாநாயகனுக்கு தெரிய வருகிறது. எனவே அவரிடம் இருந்து விலகி கடலுக்குள் செல்கிறான் கதாநாயகன். கடலுக்கு சென்றால் உயிருடன் திரும்பி வர முடியாது என்பது தெரிந்தும் தனது நண்பர்களுடன் துணிந்து கடலுக்குள் செல்கிறார். அதாவது மற்றவர்கள் சொல்வதெல்லாம் கட்டுக்கதை, அது உண்மை இல்லை என்பதை நிரூபிக்க கடலுக்கு செல்லும் கதாநாயகன் மீண்டும் கரைக்கு உயிருடன் வருகிறாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை.
இந்தியாவின் முதல் கடல் சாகச படம் என்ற கதைக்களத்தை அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் கையில் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் கதை நகர நகர அது ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. அந்த வகையில் முதல் பாதி மட்டுமில்லாமல் இரண்டாம் பாதியில் தொய்வுடன் நகர்கிறது. இடையிடையில் ஆன்மாக்களை அடித்து விரட்டுவது போன்ற காட்சிகள் ஓவர் பில்டப் போல் தெரிகிறது. அடுத்தது திரைக்கதை தான் சொதப்பியது என்று பார்த்தால் எடிட்டிங் பணிகளும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எடிட்டிங் அருமையாக அமைந்திருந்தால் சொல்ல வந்த விஷயம் என்னவென்று ரசிகர்களுக்கு மிக அழகாக புரிந்து இருக்கும். இருப்பினும் கிராபிக்ஸ் காட்சிகள் அருமை. மேலும் ஜி.வி. பிரகாஷ், திவ்யபாரதி ஆகியோரின் நடிப்பு பிரமாதம். கடலில் வரும் ஸ்பெஷல் கேரக்டரை உருவாக்கிய விதம் அருமையாக இருந்தது. படத்தின் பின்னணி இசை ஓகே ரகம் தான். ஆனால் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் திரைக்கதையிலும், எடிட்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் வெற்றி படமாக அமைந்திருக்கும்.