ஹர்பஜன் சிங் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். மேலும் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர் ஏற்கனவே அர்ஜுன், சதீஷ், லாஸ்லியா ஆகியோருடன் இணைந்து பிரண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ஹர்பஜன் சிங். அடுத்தது இவர் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை ஜான் பால்ராஜ் இயக்கி இருக்கிறார். இதில் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ஓவியா, வி டிவி கணேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சீன்டோ ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு சேவியர்- SAVIOR என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதனை படக்குழு புதிய போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதே சமயம் போஸ்டரின் மூலம் கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஹர்பஜன் சிங் இந்த படத்தில் டாக்டர் ஜேம்ஸ் மல்கோத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஓவியா ,வர்ணா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் ஜி.பி. முத்து, முத்து மாமா கதாபாத்திரத்தில் நடிக்க விடிவி கணேஷ், கடப்பாறை கணேசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விரைவில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.