ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இன்று (அக்டோபர் 17) வெளியாகி உள்ள டீசல் படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம்.
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் தான் டீசல். இந்த படத்தில் அதுல்யா ரவி, வினய் ராய் மற்றும் பலர் நடித்துள்ளனர். கச்சா எண்ணெய் – அரசியல் திரில்லர் படமாக வெளியாகி உள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், மீனவனாக நடித்துள்ளார். இவருடைய வளர்ப்பு தந்தையாக சாய்குமார் நடித்திருக்கிறார். வடசென்னையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குள் கச்சா எண்ணெயை எடுத்துச் செல்ல ராட்சத குழாய் அமைக்கப்பட்டதன் காரணமாக அங்குள்ள மீனவ மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தத் திட்டத்திற்கு எதிராக அவர்கள் எவ்வளவு போராடியும் பயனில்லாமல் போனதால் அவர்கள் கச்சா எண்ணையை திருடத் தொடங்குகிறார்கள். ஹரிஷ் கல்யாணும், அவருடைய தந்தையும் இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கிறார்கள். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மீனவ பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உதவி செய்கின்றனர். அதே சமயம் போலீஸ் அதிகாரியான வினய் ராய் மற்றும் அவருடைய உதவியாளர் விவேக் பிரசன்னா ஆகியோர் இந்த திருட்டு தொழிலில் லாபம் பார்க்க நினைத்து, இன்னும் சில திருட்டு வேலைகளை பார்க்கின்றனர். அப்போதிலிருந்து பிரச்சனை தொடங்க அதனை ஹரிஷ் கல்யாண் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஹரிஷ் கல்யாண் இதில் ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் ஒரு மாஸ் ஆக்சன் ஹீரோவாக தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார் ஹரிஷ் கல்யாண். காதல், எமோஷன் என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வினய் ராய் வில்லத்தனத்தில் மிரட்ட விவேக் பிரசன்னா, சாய்குமார், கருணாஸ், ரமேஷ் திலக், அனன்யா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். ஆனால் அதுல்யாவின் கதாபாத்திரத்திற்கு படத்தில் வேலையே இல்லை. இது தவிர இரண்டாம் பாதி தொய்வாகத் தொடங்கி, கிளைமாக்ஸில் வேகம் எடுக்கிறது. படத்தின் வசனங்கள், திபு நினன் தாமஸின் இசை மற்றும் பாடல்கள் ஆகியவை படத்தின் பிளஸ் பாயிண்ட்கள். ஆனாலும் சில லாஜிக் மிஸ்டேக்குகள் படத்தின் மைனஸாக அமைந்துள்ளது. எனவே திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும்.