சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் , நட்டி நடராஜ், கோவை சரளா, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கவனித்து வருகிறார். பரபரப்பான பல ஆக்சன் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அத்தகைய ஆக்சன் காட்சிகளை படமாக்கபடும் போது தான் பெரிய கேமரா ஒன்றின் ரோப் அறுந்து கேமரா விழுந்ததில் நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சூர்யாவுக்கு என்ன ஆச்சு என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு சூர்யா தாமாகவே முன்வந்து “உடல் நலம் சற்று தேறி உள்ளது. தங்கள் அன்பிற்கு நன்றி” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவுக்கு என்ன நடந்தது என்பதை சுப்ரீம் சுந்தர் விளக்கியுள்ளார்.
படப்பிடிப்பின் போது ரோப் கேமராவின் ரோப் அறுந்து கீழே விழுந்தது. அதை சூர்யா கீழே விழாமல் தாங்கி பிடித்து நிறுத்தினார். அதனால்தான் அவருடைய தோள் பட்டையில் சிறிய காயம் ஏற்பட்டது. சூர்யா நலமுடன் உள்ளார். சூர்யாவின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. கங்குவா படத்தினால் சூர்யா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். சூர்யாவுடன் பணியாற்றுவது எங்களுடைய சிறந்த படைப்பை வெளிக் கொண்டு வந்துள்ளது. படத்தின் இதர வேலைகளும் மும்முறமாக நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.