கண்டிப்பாக அஜித்துடன் படம் பண்ணுவேன் என இயக்குனர் சிறுத்தை சிவா பேட்டி அளித்துள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோரின் கூட்டணியில் வெளியான சிறுத்தை என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் அஜித் நடிப்பில் வேதாளம், வீரம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது மீண்டும் ஐந்தாவது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துப் போவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சிறுத்தை சிவா.
அதாவது சிறுத்தை சிவா கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே இழந்த வெற்றியை மீண்டும் பெறவேண்டும் என்ற முனைப்புடன் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் அஜித்துடன் ஐந்தாவது முறை கூட்டணி அமைப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறுத்தை சிவா, “கண்டிப்பாக அஜித் சாருடன் படம் பண்ணுவேன். அதை அவரே சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்” என்று பதிலளித்துள்ளார்.