இளையராஜா பாடல்கள், புகைப்படங்கள் மற்றும் AI பயன்பாடு குறித்து எழுந்த சர்ச்சை கேள்விகளுக்கு கங்கை அமரன் விளக்கமளித்துள்ளாா்.
சென்னையில் நடைபெற உள்ள இசையமைப்பாளர் யுகே முரளியின் 40 ஆண்டு இசை பயணத்தைக் கொண்டாடும் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, கோடம்பாக்கம் தனியார் விடுதியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசையமைப்பாளர் கங்கை அமரன், இளையராஜா பாடல்கள், காப்புரிமை, சமூக வலைத்தள புகைப்படங்கள் மற்றும் AI சார்ந்த விவகாரங்களுக்கான கேள்விகளுக்கு விரிவான பதிலளித்துள்ளாா்.

செய்தியாளர் சந்திப்பில் கங்கை அமரன் பேசியதாவது,“ஆனந்தம் அறக்கட்டளை நல்ல நோக்கத்திற்காக இசை நிகழ்ச்சி நடத்துகிறது. 10 வயதில் மேடையில் பாடத் தொடங்கி இன்று வரை செயலில் இருக்கிறோம் என்பது ஒரு சாதனை. பணம் வாங்கி பாடும் பல கலைஞர்களும் இங்கு சேவை மனப்பான்மையுடன் பங்கேற்கிறார்கள். இது மக்களிடம் சென்றடைய வேண்டும்,” என்று கூறினார்.
முதியோர் இல்லங்கள் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு, “என் பிள்ளைகள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் பல பெரியவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுவது மனதை வதைக்கிறது,” என்றார்.
இளையராஜா பாடல்களை படங்களில் அல்லது நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்கு, “பாடல்களை முழுமையாக பயன்படுத்தினால் காப்புரிமை பிரச்சினை வரும். சிறிய பகுதி பயன்படுத்தலாம். முக்கியமாக அனுமதி கேட்க வேண்டியது அவசியம். இளையராஜாவிடம் கேட்டால் அவர் கொடுத்து விடுவார். நன்றி சொன்னாலும் போதும். கேட்காமல் பயன்படுத்துவதே எரிச்சலை ஏற்படுத்துகிறது,” எனத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த தடை கூறித்த கேள்விக்கு,“ , AI க்கு அடிமையானால் நம் மூலை வேலை செய்யாது. அதில் புகைப்படம் வேறு மாதிரி இருக்கும். AI நம்ப கூடாது. AI நம்ப மாட்டேன் என்று அண்ணன் இளையராஜா கூறுவாா். அவரே தான் இசையமைப்பார்,பாடுவார். நம் மூளையில் வரும் விஷயங்கள் எழுத்துக்கள், பாட்டுகள் தான் கடைசி வரை நிற்கும். AI யில் வரும் சில விஷயங்கள் காமெடியாக இருக்கும். சிலர் கேவலப்படுத்துவதற்காக இதை செய்கிறார்கள். அதை தடுப்பதற்காக தான் இப்படி செய்கிறோம்” என்றார்.
பல படங்களில் இளையராஜாவின் இசை பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு, “அதற்குக் காரணம் அவரது இசையின் தரமான மெட்டுகள். இன்று உள்ள இசையமைப்பாளர்களும் அவ்வளவு திறமை பெற்றவர்களே. அனுமதி பெற்று பயன்படுத்தினால் இன்னும் நல்லது,” எனக் கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளாா்.
கடைசி செய்தியாளர் சந்திப்பில் வெளிப்பட்ட அவரது கோபம் குறித்து கேட்கப்பட்டபோது, “என்ன நடந்தது என்று யாரும் கேட்கவில்லை. என்னை மோசமான ஆளாக ஆக்கி விட்டீர்கள். நடிகர் சிவகுமார் செல்போனை தட்டிய சம்பவத்திலும் என்ன நடந்தது என்று நீங்கள் கேட்டீர்களா?” என சிரித்தபடி பதிலளித்தார்.
முன்னதாக, நவம்பர் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் முதியோர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக நிதி திரட்டும் நோக்கில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறினர். இதில் பல இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்துள்ளாா்.
இனி பட்டா வரலாற்றை எளிதில் தெரிந்து கொள்ளலாம்… அடுத்த வாரம் தொடங்கும் புதிய நடைமுறை!


