இசைஞானி இளையராஜா, பவதாரிணியின் பெயரில் 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழுவை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.இசைஞானி இளையராஜாவின் செல்ல மகள் தான் பவதாரிணி. இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகியாகவும் பலம் வந்தவர். இந்த வகையில் ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், மயில் போல பொண்ணு ஒண்ணு, ஒளியிலே தெரிவது போன்ற பல பாடல்களை பாடியுள்ளார். அதிலும் இளையராஜாவின் இசையில் இவர் பாடியிருந்த மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்கு தேசிய விருதினையும் வென்றிருந்தார் பவதாரிணி. இவ்வாறு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இளையராஜா, தன் செல்ல மகள் பவதாரிணியின் பெயரில் சிறுமிகளுக்கான இசைக்குழு ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதாவது பவதாரிணி தன்னிடம் பெண்கள் மட்டுமே அடங்கிய இசைக்குழுவை தொடங்க வேண்டும் என்று கூறி இருந்ததாகவும் அவருடைய விருப்பப்படி இசைக்குழுவை தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் மலேசியா சென்றிருந்தபோது மாணவிகள் பலரும் வந்து பாடல்களை பாடிக் காட்டிய நிலையில் அப்போது பவதாரிணி சொன்ன அந்த விஷயம் நினைவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார் இளையராஜா.
மேலும், “இந்த இசைக் குழுவில் 15 வயதிற்குட்பட்ட மாணவிகள் ஆடிஷன் மூலம் இடம்பெறலாம். பவாவின் இசை விருந்து எப்போதும் கிடைக்கும் வகையில் இந்த குழு செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.