தனது முன்னாள் காதலியும், நடிகையுமான ராஷ்மிகா மந்தனாவுடன் இன்றும் தொடர்பில் இருப்பதாக பிரபல நடிகர் ரக்ஷித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மட்டுமன்றி தற்போது இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக சின்மயின் கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கும் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் ரெயின்போ படத்திலும் ராஷ்மிகா நாயகியாக நடித்து வருகிறார். அண்மையில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல்.
நடிகை ராஷ்மிகா மந்தனா திரைக்கு வந்த சில மாதங்களிலேயே, அவரது முதல் பட நாயகன் ரக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமண நிச்சயம் செய்து கொண்டார். ஆனால், இருவரும் காதலை முறித்துக் கொண்டதால் திருமணமும் நின்றுபோனது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் ரக்ஷித், ராஷ்மிகாவுடன் எனது திருமணம் நின்று விட்டாலும், இன்று வரை நான் அவருடன் தொடர்பில் உள்ளேன். அவருக்கு மிகப்பெரிய கனவுகள் இருந்தன. அதனை அவர் அடைந்துவிட்டார். அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்தே ஆக வேண்டும் என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.