கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மிக பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த 1996 இல் வெளியான இந்தியன் முதல் பாகத்தை போல் இந்தியன் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. ஆனால் இந்தியன் 2 படத்தின் இறுதியில் இடம் பெற்ற இந்தியன் 3 பட ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதாவது இந்தியன் 3 திரைப்படத்தில் சேனாபதியின் தந்தை வீரசேகரன் தோன்றுகிறார். வீரசேகரனாக நடித்துள்ள கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இந்தியன் 3 படம் முழுவதும் சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பாக வெள்ளையர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையிலான போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆகையினால் இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 3 படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெரும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்தியன் 3 படத்தை இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன் ஆகியோர் நடனமாடியிருந்த கதறல்ஸ் வீடியோ பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.