மெட்ராஸ்காரன் படத்திலிருந்து காதல் சடுகுடு ரீமேக் பாடல் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகியுள்ள படம் தான் மெட்ராஸ்காரன். இந்த படத்தில் ஷேன் நிகாமுடன் நடிகர் கலையரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வாலி மோகன்தாஸ் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஷாம் சி எஸ் இசை அமைக்க பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். காதல் மற்றும் எமோஷனல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அதன்படி தற்போது இந்த படத்தில் புதிய பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த பாடலானது மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் -ஷாலினி நடித்து ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற காதல் சடுகுடு பாடலின் ரீமேக் ஆகும். ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் பாடலான இந்த பாடலை மெட்ராஸ்காரன் படக்குழு ரீமேக் செய்திருக்கும் தகவல் வெளியானதிலிருந்தே இப்பாடலின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. தற்போது இந்த பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.