நடிகை காஜல் அகர்வால் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரை உலகில் வலம் வரும் முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், மாரி ஆகிய பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு குறைவான படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தின் உருவாகி வரும் சிக்கந்தர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சல்மான் கான் நடிப்பில் புராணக்கதை படமாக தயாராகும் இந்த படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். இந்த படத்தில் சல்மான் கான், காஜல் அகர்வால் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சுனில் ஷெட்டி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் பிறந்த நாளை முன்னிட்டு சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், சிக்கந்தர் படத்திற்காக 24 நாட்கள் கால் சீட் கொடுத்திருந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.