நடிகை காஜல் அகர்வால், கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். அதன்படி முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார்.
மேலும் இவர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கில் சத்யபாமா எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற மே 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது முதல் படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “எனது முதல் படமான லட்சுமி கல்யாணம் படத்தில் நடிப்பதற்காக நடிகை தேர்வுக்கு சென்றபோது எனக்கு தெலுங்கில் பேச தெரியாது. என்ன மாதிரி நடிக்க சொல்வார்கள்? என்ன மாதிரியான வசனம் பேச சொல்வார்கள் என்ற பதற்றத்துடன் இருந்தேன். அப்போது இயக்குனர் என்னை ஒரு முறை அழுது காட்ட சொன்னார்.
பீலிங்கே இல்லாமல் எப்படி அழுவது என்று யோசித்தபோது என்னுடன் வந்த என் தந்தை நான் எப்போதும் அழும் ஒரு விஷயத்தை சொன்னார். அவ்வளவுதான் உடனே கதறி அழுதுவிட்டேன். இயக்குனர் தேஜா நீ ரொம்ப அழகா அழுகிறாய் என்று லட்சுமி கல்யாணம் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்” என்று கூறினார் காஜல்.