முத்தமிழ் அறிஞர், கலைஞர் மு.கருணாநிதி ஒரு சிறந்த இலக்கியச் சிந்தனைளர். முத்தமிழ் கலைகளுக்கும் சினிமாவுக்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. எழுத்து என்னும் தீக்குச்சியால் தமிழ் மக்கள் மனதில் அறிவு விளக்கை ஏற்றியவர். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி தமிழ்த் திரையுலகத்துக்கு ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருடைய நூறாவது பிறந்த ஆண்டில் “கலைஞர் 100” விழா பிரம்மாண்டமாக சென்னை-கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று (ஜனவரி 6, 2024) கொண்டாடப்பட உள்ளது.
இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பல்வேறு நட்சத்திரங்கள் பங்கு பெற உள்ளனர்.
கலைஞரின் நினைவை போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வாக கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட உள்ளது. இந்த ஆவணப் படத்தை மதராசபட்டினம், தெய்வத்திருமகன், தலைவா போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் A.L விஜய் இயக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் “கலைஞர் தசாவதாரம்” எனும் குறு நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட உள்ளது. கலைஞரின் வாழ்க்கையின் பல்வேறு காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த நாடகத்தில் கே.எஸ். ரவிக்குமாரும், தம்பி ராமையா ஆகியோர் கலைஞர் போல வேடமிட்டு நடிக்க உள்ளனர். இந்த நாடகத்தில் பெரியார் வேடத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான வேலு பிரபாகரன் நடிக்கிறார். ரமேஷ் கண்ணா அறிஞர் அண்ணாவாக நடிக்கிறார். நடிகர் தனுஷ் இந்த விழாவில் கலைஞர் பற்றி அவரே எழுதிய பாடல் ஒன்றை பாட உள்ளார். இது மட்டுமின்றி மேலும் பல கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. கமல், ரஜினி, விஜய் உட்பட தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -