Homeசெய்திகள்சினிமாகலைஞர் - சிவாஜி கூட்டணியில் உருவான பராசக்தி - ஏவிஎம் நிறுவனத்தின் சாதனை

கலைஞர் – சிவாஜி கூட்டணியில் உருவான பராசக்தி – ஏவிஎம் நிறுவனத்தின் சாதனை

-

கலைஞர் – சிவாஜி கூட்டணியில் உருவான பராசக்தி – ஏவிஎம் நிறுவனத்தின் சாதனை

கலைஞர் கருணாநிதி வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் தமிழ் திரை உலகின் வரலாற்றில் அழியா இடம் பெற்றுள்ளது.

கலைஞர் - சிவாஜி கூட்டணியில் உருவான பராசக்தி - ஏவிஎம் நிறுவனத்தின் சாதனை

1951 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவோடு இணைந்து ஒரு படத்தை ப.நீலகண்டன் இயக்கத்தில் ஏவிஎம் தந்தார். இந்தப் படத்தின் கதை வசனத்தை அண்ணா ஒரே நாளில் இரவில் எழுதித் தந்தாராம். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நாகேஸ்வரராவ், டி.எஸ்.பாலையா நடிப்பில் வெளிவந்த இந்தப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அண்ணா ஏவிஎம்மிற்காக எழுதியது என்ற வகையில் வரலாற்றில் இடம் பிடித்தது.

கலைஞர் - சிவாஜி கூட்டணியில் உருவான பராசக்தி - ஏவிஎம் நிறுவனத்தின் சாதனை

நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளர் பெருமாளுடன் இணைந்து ஏவிஎம் தயாரித்த திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தில் சிவாஜி அறிமுகமானதும், கலைஞர் வசனம் எழுதியதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜியை பரிந்துரைத்த போது ஏவி மெய்யப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவரின் தயக்கத்தைப் போக்கியவர் பெருமாள். படம் வெளியாகி தமிழ்த்திரை உலகில் புதிய வரலாற்றைப் படைத்தது. பின்னர் சிவாஜியின் நடிப்பாற்றலைக் கண்டு வியந்த ஏவிஎம் அவர்கள் சிவாஜி தமிழ்நாட்டில் பிறந்தது நாம் செய்த அதிர்ஷ்டம் என்று புகழ்ந்துரைத்தார்.

பெண்

பின்னர் தமிழில் பெண் என்ற படத்தைத் தயாரித்த ஏவிஎம் அதனை ஹிந்தியிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுக்க திட்டமிட்டார். மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை அப்படங்கள் தரவில்லை. தமிழில் வந்த பெண் படத்தில் தான் ஜெமினி கணேசன் கதாநாயகனானார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

1954 ஆம் ஆண்டில் ஏவிஎம் நிறுவனம் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக பாடல்கள் இல்லாத திரைப்படம் ஒன்றை எடுத்தது. வீணை எஸ்.பாலச்சந்தர் கூறிய கதை ஏவி மெய்யப்பனுக்குப் பிடித்துப் போக, சிவாஜி, பண்டரிபாய் நடிப்பில் திரைப்படம் தயாரானது. இந்தத் திரைப்படத்தில் கதை சொல்லும் உத்தியானது அகிரா குரோசோவோ இயக்கத்தில் வெளிவந்த ரோஷோமான் திரைப்படத்தைப் போன்ற இருந்தது. இதே உத்தி கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

குலதெய்வம்

அண்ணா, கலைஞரைத் தொடர்ந்த திராவிட இயக்கத்தைச் சார்ந்த முரசொலி மாறன் கதை வசனம் எழுத குலதெய்வம் என்ற திரைப்படத்தை தயாரித்தார் ஏவிஎம். இப்படம் வெற்றி பெற்ற நிலையில் அதனை ஹிந்தியிலும் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் தயாரித்து வெற்றி கண்டார்.

குழந்தைகள் அதிகம் நடித்து ஹிந்தியில் ஏவிஎம் தயாரித்த ஹம்பஞ்சி ஏக் டால்கே என்ற இந்திப்படம் மத்திய அரசின் தங்கப்பதக்கத்தை வென்றது. இவ்விருதினை வாங்க டெல்லி சென்ற ஏவி மெய்யப்பன் மற்றும் திரைப்படத்தில் நடித்திருந்த டெய்ஸிராணி உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்களுக்கு அப்போதையப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு விருந்தளித்தார். இதனை ஏவிஎம் தன் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதி மகிழ்ந்தார்.

சகோதரி

ஒரு திரைப்படத்தின் வெற்றி எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் ஏவிஎம் தான் பெற்ற அனுபவங்களால் கைதேர்ந்தவராக இருந்தார். இதற்கு உதாரணமாக அவர் எடுத்த சகோதரி திரைப்படத்தைச் சொல்லலாம். பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த சகோதரி திரைப்படத்தில் முதலில் சந்திரபாபு நடிக்கவில்லை. எடுத்தவரை படத்தைப் போட்டுப் பார்த்த ஏவி மெய்யப்பன், சந்திரபாபுவை ஒப்பந்தம் செய்யச் சொன்னதோடு, கதையோடு ஒட்டி வருவதை போல் ஒரு பால்காரர் கதாபாத்திரத்தையும் அவர்தான் பரிந்துரைத்துள்ளார். இந்த மாற்றம்தான் படம் வெற்றி பெற காரணமாய் அமைந்தது.

இது மட்டுமல்ல படத்தை எடுத்துவிட்டு பெரும்பாலும் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் அழைத்துப் போட்டுக்காட்டி அவர்களின் கருத்தைக் கேட்பதையும் வழக்கமாக ஏவிஎம் கொண்டிருந்தார். 1960இல் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தினை தயாரித்தார் ஏவிஎம்.

களத்தூர் கண்ணம்மா

இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல் அறிமுகமானார் என்பது பலரும் அறிந்த ஒன்று. இந்தத் திரைப்படம் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான விருதினை வென்றதோடு, கமல்ஹாசனுக்கு குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தையும் பெற்றுத் தந்தது. இந்தத் திரைப்படத்தை MAVOORI AMMAYI என்ற பெயரில் தெலுங்கில் பேச வைத்தார். இதே ஆண்டில் வெளியான தெய்வப் பிறவியும் அவருக்கு வெற்றியைத் தந்தது.

இதனைத் தொடர்ந்த பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த பா வரிசைப் படங்களான பார்த்தால் பசி தீரும், பாவ மன்னிப்பு உள்ளிட்ட படங்கள் ஏவிஎம் என்ற நிறுவனத்தின் தரமான தயாரிப்புக்கு உத்தரவாதம் சொன்ன படங்கள். ஜெய்சங்கர், ஜமுனா குட்டி பத்மினி போன்றோர் நடிப்பில் வெளிவந்த குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தை பெருந்தலைவர் காமராஜருக்குப் போட்டுக் காட்டி அகமகிழ்ந்தாராம் ஏவிஎம்.

பாவ மன்னிப்பு

1966 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் நடிப்பில் அன்பே வா திரைப்படத்தை ஏவிஎம் தயாரித்தது. இந்த ஒரு திரைப்படம் தான் ஏவிஎம் பேனரில் எம்ஜிஆர் நடித்தது. வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றப் படமாகவும் அமைந்தது.

அன்பே வா

ரசிகர்களை ஈர்க்கும் கதைகள் கிடைத்தால் அவற்றை திரைப்படமாக்கு வதில் தயக்கம் காட்டமாட்டார் ஏவிஎம். அப்படித்தான் பின்னாளில் இயக்குநராக புகழ்பெற்ற கே.பாலச்சந்தரின் நாடகமான சர்வர் சுந்தரத்தை நாகேஷ் நடிப்பில் தயாரித்து வழங்கினார். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

சர்வர் சுந்தரத்தை

பின்னர் பாலச்சந்தரின் திறமை கண்டு அவரின் இயக்கத்தில் மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தினையும் தயாரித்தார். 1972இல் வெளிவந்த காசேதான் கடவுளடா திரைப்படத்திற்குப் பின் ஏவிஎம்மின் படத்தயாரிப்பில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

மேஜர் சந்திரகாந்த்

படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஏவிஎம் ஈடுபட்டார். இதற்காக அறக்கட்டளையை நிறுவி, முதியோர் இல்லங்களை அமைப்பதற்கான உதவிகளைச் செய்தல், நலிந்த கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் போன்ற பணிகளை தந்தையின் பாதையில் இன்றும் அவரது வாரிசுகள் தொடர்கின்றனர். 1963 ஆம் ஆண்டில் ஏவிஎம் அவர்கள் தனது தந்தையின் பெயரில் விருகம்பாக்கத்தில் ஆவிச்சி பள்ளியைத் தொடங்கினார்.

வைஜயந்தி மாலா, கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவர் ஏவி எம் அவர்கள். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டி ராமா ராவ் என ஐந்து முதல்வர்களோடு பணியாற்றியப் பெருமைக்குரியவர். தமிழ் சினிமாவில் பின்னணி பாடும் முறையை முதன் முதலில் அறிமுகம் செய்தவர், தமிழில் முதல் மொழி மாற்றுப் படத்தைத் தந்தவர், படங்களுக்கு ஆங்கிலத்தில் விளம்பரம் கொடுத்தவர், வியாபாரத்தில் அதிக பட்ச நேர்மையைக் கடைப்பிடித்தவர் என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஏவிஎம் உடல்நலக் குறைவு காரணமாக 1979 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் நாள் மறைந்தார்.

கலைஞர் - சிவாஜி கூட்டணியில் உருவான பராசக்தி - ஏவிஎம் நிறுவனத்தின் சாதனை

ஏவிஎம்மின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவரது தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது. அதே ஆண்டில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் ஏவிஎம் அவர்களின் திருவுருவச் சிலை கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. தந்தையின் வழியில் நின்று தனயன்கள் தமிழ் சினிமாவிற்கு பல சிறந்த திரைப்படங்களைத் தந்தனர். பின்னர் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வழங்கி வந்தனர். ஆர். சுதர்சனம் மாஸ்டர் உருவாக்கிய அற்புதமான மெட்டின் பின்னணியோடு ஏவிஎம் எனும் லோகோ திரும்பும் போதேல்லாம் ரசிகர்கள் மனதில் ஏற்படும் நெகிழ்ச்சிக்கு காரணம், அந்நிறுவனத்தின் பின்னணியில் இருந்த ஏவிஎம் என்ற மாமனிதரின் உழைப்பு.

MUST READ